செய்தியரங்கத்தில்


காஷ்மீர கட்டுப்பாட்டு கோட்டின் குறுக்கே பாதைகளை திறக்கும் திட்டத்திற்கு இந்திய பாகிஸ்தான் அரசுகள் ஒத்துக்கொண்டுள்ளன.

பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்கும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்கும் இடையேயான பாதைகள் சிலவற்றை திறப்பது குறித்து திட்டத்தை இரு அரசுகளும் ஒத்துக் கொண்டுள்ளன.

காஷ்மீரைப் பிரிக்கும் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டி முக்கிய இடங்களில் நிவாரண முகாம்களை அமைப்பது என்பது புதிய திட்டத்தின் மையமாக உள்ளது. பாகிஸ்தானிடமிருந்து உரிய அனுமதி கிடைத்தால், நிவாரண முகாம்கள் செவ்வாய்கிழமையிலிருந்தே துவங்க முடியும் என்று இந்திய அரசின் வெளியுரவுத் துறை சார்பில் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த முகாம்கள் அடுத்த ஒரு சில தினங்களில் செயல்பட ஆரம்பித்தால், உணவு, குடிநீர், கூடாரங்கள் போன்ற அத்தியவஸ்ய நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும்.

இந்திய பகுதியில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்புவது பாகிஸ்தான் பகுதியில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்புவதை விட சற்றே எளிதானது. மிக அதிக அளவில் ராணுவங்கள் குவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டி மூன்று நிவாரண முகாம்களை அமைக்க இந்தியா முன் வந்தது. ஆனால் பாகிஸ்தான் ஐந்து முகாம்கள் அமைக்க வேண்டும் என்று கோரியது.

இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் இருக்கும் பிரிவினைவாதத் தலைவர்கள் சிலர் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் இது போன்ற நிவாரண முகாக்கள் அதிக திறக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.--------------------------------------------------------------------------------


ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இலங்கை வரவுசெலவு திட்டம் சமர்ப்பிக்கப்படக்கூடாது - ஐ.தே.க. ஜனாதிபதிக்கு கடிதம்


இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் மஹிந்தவும் ரணிலும்
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவு திட்டமானது நவம்பர் 17ஆம் தேதி நடக்கவுள்ள நாடாளுமன்றத்திற்கு பிறகே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரி எதிர்கட்சியினரான ஐக்கிய தேசிய கட்சியினர் ஜனாதிபதி குமாரதுங்காவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தேர்தலுக்கு முன் வரவுசெல்வு திட்டம் சமர்ப்பிக்கப்படுமானால் அது ஆளும் சுதந்திரக் கட்சியினரின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்குமுன் மக்களுக்கு சலுகைகளை அள்ளிவீசுவதாக அமையும் என்று ஐ.தே.க.வின் பிரதி தலைவர் கரு ஜெயசூர்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார்.

இதனிடையே எதிர்கட்சித் தலைவரும் மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி குமாரதுங்கவை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைமுறை குறித்தும் தான் வெற்றிபெற்றால் அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தான் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தை குறித்தும் ரணில் சந்திரிகாவுடன் பேசவிருக்கிறார் என்று தெரிகிறது.--------------------------------------------------------------------------------


முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் பற்றிய நிபுணர் கருத்து


தேவசகாயம்
தமிழக தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சமீபத்தில் சுமார் 2000 கோடிரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சிதிட்டத்தின் மூன்றாம் கட்ட செய்ல்திட்டம் ஒன்றை வெளியிட்டார்.

உலகவங்கயின் நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட இருக்கும் இந்த திட்டத்தால், சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் காணும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை நகரின் நீடித்த வளர்ச்சிக்கான மக்கள் கூட்டமைப்பு என்கிற அமைப்பின் பிரதான ஆலோசகர் தேவசகாயம் தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில் மேல்மட்டத்தில் அரசு அதிகாரிகளால் திட்டமிடப்படும் இது போன்ற திட்டங்கள் கடந்தகாலத்தில் பெரிய பயன் தரவில்லை என்று கூறினார்.

இந்த திட்டங்களால் பயன்பெறப்போகும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் ஜனநாயக பிரதிநிதிகளின் கலந்தாலோசனைகள் இல்லாமல் இவை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த புதிய திட்டமும் மக்களுக்கு உரிய பலன்களைத் தராது என்கிறார் அவர்.

தேவசகாயத்தின் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.--------------------------------------------------------------------------------


மட்டக்களப்பு இடைத்தரிப்பு முகாமில் துப்பாக்கிசூடு; நால்வர் காயம்


சம்பவ இடத்தில் பொலிஸ் விசாரணை நடக்கிறது
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகர பிரதேசத்தல் சுனாமியினால் இருப்பிடங்களை இழந்தவர்களக்கான இடைத்தரிப்பு முகாமொன்றில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் மூன்று என நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாகிரா வித்தியாலய இடைத்தரிப்பு முகாமில் வழமையான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்பினரை இலக்கு வைத்து அடையாளந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு பொலிசார் கூறுகின்றனர்.

காயமடைந்த முன்று சிறுவர்களுமே 4 வயதிற்கும் 7 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் கூறப்படுகிறது.

முகாமிற்கு முன்பாகவுள்ள வீடொன்றின் மதிலுக்கு பின்னால் மறைந்திருந்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

சம்பவத்தின் போது 4 இராணுவ வீரர்களும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கடமையிலிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கும் மார்ச் மாதம் இரண்டாம் திகதிக்குமிடைப்பட்ட காலப்பபகுதியில் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் சமபவங்களின் பின்ணனி பற்றி ஆராய நியமிக்கப்பட்டட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையை இரு தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கையளித்துள்ளது.

வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் தலைமையிலான இந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் நடைபெற்றபோது மாவட்ட தலைமைப் போர்நிறுத்த கண்கானிப்பாளர்கள், மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் உட்பட இருபதிற்கும் மேற்பட்டோர் சாட்சியமளித்தார்கள்.

விடுதலைப் புலிகளின் மட்டகக்ளப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யன் படுகொலைச் சம்பவத்தையடுத்து இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.--------------------------------------------------------------------------------


பாட்டொன்று கேட்டேன் - ஐம்பத்து ஆறாம் பாகம்


பாடகி ஜிக்கி
இறவாப் புகழ்பெற்ற மந்திரிகுமாரி படத்து வாராய் நீ வாராய் பாடலில் ஒலிக்கும் பெண்ணின் குரல் ஜிக்கி என்று அழைக்கப்படும் பி.ஜி.கிருஷ்ணவேணியினுடையதாகும்.

ஜிக்கி இந்தப் பாடலைப் பாடும்போது அவருக்கு வயது வெறும் 13தான். தவிர 7 வயதிலேயே திரைப்படத்தில் பாடிய பெருமையும் அவருக்கு உண்டு

படத்தின் கதாநாயகிக்கு 13 வயது சிறுமியின் குரல் எப்படிப் பொருந்தும் என்று தயாரிப்பாளர் சந்தேகித்திருந்தும் ஜிக்கியின் குரல்தான் இப்பாடலுக்கு மிகப் பொருத்தமானது என்று வாதிட்டிருந்தார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.

ராமநாதனின் நம்பிக்கை பொய்க்காமல் இப்பாடல் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகும் ரசிகர்கள் நெஞ்சில் அழியா இடம்பிடித்திருக்கிறது.

முறையான இசைப்பயிற்சி அதிகம் இல்லையென்றாலும் இசைமேதை ராமநாதன் அமைக்கும் கடினமான சங்கதிகளையும் தனது குரலில் எளிதில் சொல்லக்கூடிய திறமை படைத்தவர் ஜிக்கி.

லதா மங்கேஷ்கருக்கு இணையாக ஜிக்கி பாடுகிறார் என்று பிரபல ஹிந்தி நடிகர் ராஜ்கபூரிடம் இருந்தே பாராட்டுதலைப் பெற்றவர் ஜிக்கி.

இசையமைப்பாளர் மற்றும் பாடகரான ஏ.எம்.ராஜாவை காதல் திருமணம் செய்துகொண்ட ஜிக்கி திருமணத்திற்கு பிறகு அதிக அளவில் பாடல்களைப் பாடியிருக்கவில்லை.

தனது இனிய குரலால் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் குடிகொண்டிருந்த ஜிக்கி சில மாதங்களுக்கு முன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.